சென்னையில் உயிரிழப்பைக் குறைத்த ‘தலைக்கவசம்’

2 mins read
0305dfe4-7c20-4ac0-95d2-d4171323cb15
புறநகர்களில் பலர் தலைக்கவசம் அணிவதில்லை. - படம்: ஊடகம்

சென்னை: இருசக்கர வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நடவடிக்கையால் சென்னையில் விபத்துகளின்போது தலைக்கவசம் அணியாததால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலைக்கவசம் அணிவது தொடர்பாக உரிய கண்காணிப்பு இல்லாததால் அம்மாவட்டங்களில் விபத்தில் பலியாகும் இருசக்கர வாகனமோட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் விபத்துகளில் சிக்கிய இருசக்கர வாகனமோட்டிகளில் 56 பேர் தலைக்கவசம் அணியாததால் மாண்டுவிட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 64ஆக உள்ளது. ஆனால் சென்னையில் பலி எண்ணிக்கை 11ஆக பதிவாகி உள்ளது.

எனினும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு குறைவாக உள்ளதால் தலைக்கவசம் அணியாத வாகனமோட்டிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகனமோட்டிகள் மீது 14,129 வழக்குகள் பதிவாகி உள்ளன.

அண்மைய ஆய்வின்போது பெருநகர சென்னை மாவட்டத்தில் சுமார் 88 விழுக்காட்டினர் தலைக்கவசம் அணிவது தெரியவந்துள்ளது.

காய்கறிச் சந்தைக்குச் செல்வது, குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு, ஏடிஎம் மையங்களுக்குச் செல்வது என குறைந்த தூரம் சென்று வரும்போது இருசக்கர வாககமோட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக சென்னை காவல்துறை கூறுகிறது.

நடப்பாண்டில் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 3,200 இருசக்கர வாகனமோட்டிகள் விபத்துகளில் சிக்கி மாண்டுவிட்டனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பலி எண்ணிக்கை 3,452ஆக இருந்தது. பலியானோரில் சுமார் 31 விழுக்காகடட்டினர் தலைக்கவசம் அணியாததால் துயர முடிவைச் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் தலைக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத்தையும் அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மேலும் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
விபத்து