சென்னை: இந்தியாவுக்காக எல்லாரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற குரல் பதிவுத் தொடர் (பாட்காஸ்ட்) மூலம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி அவரது குரல்பதிவின் முதல் பகுதி வெளியானது.
அதில், காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவம் சிதைக்கப்படுவதாக முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் மத்தியில் உள்ள பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது என்றும் ‘குஜராத் மாடல்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்தார்கள் தற்போது அதுகுறித்துப் பேசுவதே இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
“அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்ற பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது எனத் தெரியவில்லை.
“கூட்டாட்சித் தத்துவத்திற்கு மக்களாட்சியின் மகத்துவத்திற்கு பங்கம் வரும்போது அதை தடுக்க திமுக முதலில் முன்வரும். மாநில அரசுகளுக்கு முறையாக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கான வரி வருவாய் பறிக்கப்படுகிறது. மாநிலங்களை அழிக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி அமைந்துள்ளது என்றும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு இழக்கும் நிதி அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு என எந்த திட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வருவதில்லை என்றார்.
‘வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்’ என்ற புதிய முழக்கத்தையும் அவர் முன்வைத்தார்.