சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 54,676 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பி.டெக் ஆகிய படிப்புகளுக்கான 2.19 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
இதற்காக மூன்று கட்டங்களாக மாணவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அரசு ஒதுக்கீட்டின்படி 1.60 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
இதில் அரசுப் பள்ளி மாணவர் பிரிவில் 11,058 பேரும் மற்ற பிரிவுகளில் 95,046 பேரும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், 54,676 இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புக்குத் தேவையான அனைத்துவித கட்டமைப்புகளும் உள்ள கல்லூரிகளை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். அத்தகைய கட்டமைப்புகள் இல்லாத கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணிப்பதால்தான் இத்தனை இடங்கள் காலியாக உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

