தமிழகத்தில் மின் உற்பத்தி 8.68% அதிகரிப்பு: மத்திய மின்சார ஆணையம் தகவல்

1 mins read
ceec5efb-aa36-4e5c-b666-a298014a75be
தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தியானது கடந்த 2021-22ஆம் ஆண்டில், 8.68 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த மின்னுற்பத்தி 2021-22-ம் ஆண்டில் 5,691 கோடி யூனிட்டுகளாக இருந்தது என்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 5,237 கோடி யூனிட்டுகளாக இருந்தது என்றும் அந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 2021-22-ம் ஆண்டுக்கான நாட்டின் மின் உற்பத்தி தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய நாட்டின் தென்பகுதியில் 33,712 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21இல் 28,994 கோடி யூனிட்டுளாக இருந்தது. இந்தப் பட்டியலில் தமிழகம் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இக்காலகட்டத்தில் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மின் உற்பத்தி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது என்றும் மத்திய மின்சார ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் மின் வாரியம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் அனல், எரிவாயு, காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம், இந்திய அணுமின் கழகம் ஆகியவற்றுக்கு தமிழகத்தில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்