சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது பதிவாகி உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேளையில், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக பிரசாரம் மேற்கொண்டது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பாஜகவின் அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து முரசொலி அறக்கட்டளை சார்பில் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் எல்.முருகன் தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகியது. இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்தார்.
இது தொடர்பாக எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.