சென்னை: பாஜகவுக்கு ‘இந்தியா’ என்ற சொல்லே கசக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டு வதாக சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி 20 மாநாட்டு விருந்தினர் களுக்கான அழைப்பிதழில் ‘பாரத குடியரசுத் தலைவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடுவதற்குப் பதில் பாரத குடியரசுத் தலைவர் என இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில், தமிழக முதல் வரும் இது தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ‘இந்தியா’ என்ற சொல்லே பாஜகவை விரட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
“பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல் கசந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே எதிர்வரும் 18ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாக்களுடன் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்யும் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.