சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படியும் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு காவல்துறை துணை ஆணையாளர் உமையாள் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி முன்னிலைப் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தது. அதன்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை நடிகை விஜயலட்சுமி அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்தன. பரிசோதனை குறித்த மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.