சென்னை: தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில் கல்வியிலும் அதற்கான கட்டமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
‘ஒரு ட்ரில்லியன் டாலர் மின்னியல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு தலைமுறைகளாக தமிழகத்தில் 40 மடங்கு பொறியியல் பட்டதாரிகள் கூடுதலாக உருவாகியுள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“நான் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே கல்லூரிப் படிப்பை முடித்து வெளியில் வந்தனர், ஆனால் 2016ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான 2,40,000 இடங்கள் இருந்த நிலையில் 160,000 இடங்கள் நிரப்பப்பட்டன.
“அரசுக்கு மிகப்பெரிய இரண்டு பொறுப்புகள் இருக்கிறது, இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தியது யார் என்பது முதல் கேள்வி. ஏனென்றால், தான் படிக்கும்போது ஏறக்குறைய 60% மாணவர்கள் வெளிநாடு சென்று விட்டார்கள், காரணம் அப்போது பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை அதிகமாக இருந்தது,” என்றார் அமைச்சர் பழனிவேல் ராஜன்.
தற்போது பொறியியல் பட்டதாரிகளுக்கு அனுபவமும் ஊதியமும் குறைவாக உள்ளது என்றும் படித்து முடித்த பிறகு ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணம் மாணவர்களிடம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போதிய அனுபவம் இல்லாத ஆசிரியர்கள், பெற்றோர்கள் பட்டதாரிகளாக இல்லாமல் இருப்பதன் காரணமாக மாணவர்களின் வேகமும் ஆற்றலும் குறைகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“வெளிநாடுகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டமாக நாட்டின் பொருளாதாரம் குறித்து விளக்கப்படுகிறது. பல்கலைக் கழகஙகளில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் இருந்து ஊக்கத்தொகை வழங்கப்படுவதால் அவர்களால் ஆராய்ச்சியில் ஈடுபட முடிகிறது.
தொடர்புடைய செய்திகள்
“எனவே அரசாங்கம், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் ஆகிய முத்தரப்பும் இவ்வாறு செயல்பட்டால் மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற உதவிகரமாக இருக்கும்,” என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இவ்வாறான எண்ணத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதாக அவர் கூறினார். இதன் மூலம் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் ‘மைக்ரோசாப்ட்’ போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளித்து உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தரப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


