சென்னை: சில மணி நேரங்கள் நீடித்த கனமழை காரணமாக சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. ஆறு அனைத்துலக விமானங்கள், 10 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் விமானப் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.
வியாழக்கிழமையன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விமானங்களைத் தரையிறக்குவதிலும் விமானப் புறப்பாடும் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு முழுவதும் நீடித்த பலத்த மழையால் சென்னை மாநகரச் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. மேலும், பலத்த காற்றும் வீசியது இதனால் வாகனமோட்டிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடியில் நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவானது. மேற்கு தாம்பரத்தில் 6.2 செ.மீ. மழையும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 6.1 செ.மீ மழையும் மீனம்பாக்கத்தில் 5.6 செ.மீ. மழையும் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், கண்ணூர், டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களால் உரிய நேரத்தில் தரையிறங்க முடியவில்லை.
அவை சில நிமிடங்கள் வானில் வட்டமடித்த பின்னர், வானிலை சீரடைந்ததும் தரையிறங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத்துக்கு செல்ல வேண்டிய அனைத்துலக விமானங்களின் புறப்பாடு தாமதப்பட்டது. ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு செல்ல வேண்டிய உள்நாட்டு விமானங்களின் புறப்பாடும் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் கனமழையால் தரையிறங்க முடியவில்லை. இதனையடுத்து அந்த விமானம் 64 பயணிகளுடன் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.