தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோடநாடு வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!

2 mins read
f98cc1f7-aeec-4558-b1a9-272aeec30cb4
கோடநாடு எஸ்டேட் பங்களா. - படம்: ஊடகம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கடந்த 2017ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அங்கு கொள்ளைச் சம்பவமும் அரங்கேறியது.

இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்கள் தெரியவந்தன. எனினும் கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மாண்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டுச் சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், உண்மைக் குற்றவாளிகளை கண்டறியும் நோக்கத்துடனேயே விசாரணை நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே இந்த வழக்கு காரணமாக அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இடைக்கால விசாரணை அறிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் தாக்கல் செய்தனர். நான்கு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இவ்வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் அதற்குக் கால அவகாசம் தேவை என்றும் சிபிசிஐடி கோரியது. அதை ஏற்றுக்கொண்டு அக்டோபர் 13ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவர் விபத்தில் சிக்கி மாண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் தனபால் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். அவர் அவ்வப்போது வெளியிடும் சில தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவரிடம் வரும் 17ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த சிலர் கோடநாடு வழக்கு தொடர்பாக தம்மிடம் பேரம் பேச முற்பட்டதாக தனபால் கூறியுள்ளார். எனினும் தாம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றார் அவர்.

இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்