சென்னை: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.
இந்த வழக்கை வேறு நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. எனினும் இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இது அமைச்சர் தரப்புக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தார் பொன்முடி. அப்போது வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் வழக்குப் பதிவானது.
பல ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் கடந்த ஜூன் 28ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், வேலூர் நீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தங்களிடம் உரிய விளக்கம் கேட்காமலும் வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளதை கருத்தில் கொள்ளாமலும் நீதிபதி முடிவெடுத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும்போது எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.