விளையாட்டுத்துறையில் ஆண்டுதோறும் 100 பதக்கங்கள்; இலக்கு நிர்ணயித்த அமைச்சர் உதயநிதி

1 mins read
39bd0c98-2a62-411e-b6d5-fb9eff09c081
உதயநிதி ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அனைத்துலக அளவிலும் இந்திய அளவிலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டி களில் தமிழகம் ஆண்டுதோறும் நூறு பதக்கங்கள் வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் விளையாட்டுத்துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருவதாக டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல, நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

“இவ்வாறு வெளியான அறிவிப்புகள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். தமிழக வீரர், வீராங்கனைகள் ஆண்டுதோறும் நூறு பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்யும் வகையில் பணியாற்றுவோம்,” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் ஈடுபாடு காட்டும் இளையர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கான பரிசுகளை அதிகரிப்பதும் அவற்றுள் முக்கிய அம்சமாக இருக்கும் எனத் தெரிகிறது.