சென்னை: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் அவர் கைதாகி உள்ளார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் சிக்கல் நிலவியது.
பின்னர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே வழக்கை விசாரிக்கலாம் என அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமக்குப் பிணை வழங்கக் கோரி, செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பது சரியல்ல என்று உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் பிணை கோரியுள்ளார்.
இந்த மனு மீதான தீர்ப்பைப் பொறுத்தே செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் எனக் கருதப்படுகிறது.

