சென்னை: எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டியா’ கூட்டணியை யாராலும் பிளவுபடுத்த இயலாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து அத்தகைய பிளவு முயற்சி மேற்கொள்ளப்படலாம் எனச் சுட்டிக்காட்டினார்.
“சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கவன ஈர்ப்புக்காக பலர் பேசி வருகின்றனர். இதுபோன்ற எதிர்ப்புகளை பெரியார், அம்பேத்கர் எனப் பலரும் சந்தித்துள்ளனர்.
“அமைச்சர் உதயநிதி முன்வைத்தது சனாதன சக்திகளுக்கு எதிரான கருத்தே தவிர, இந்துக்களுக்கு எதிரான கருத்தல்ல. சனாதன சக்திகள் என்றால் சமூகத்தில் நிலவும் பாலின, சாதியப் பாகுபாட்டை நியாயப்படுத்துபவர்கள்,” என்றார் திருமாவளவன்.
பாகுபாடுகள் களையப் பெற்று ஜனநாயகம் வளர வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், இக்கருத்துக்கு எதிராக பிரதமரே பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.
“பிரதமரும்கூட தேர்தலையொட்டித்தான் பேசியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த வேண்டும், கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கி, இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் கனவு காண்கின்றனர். அந்தக் கனவு பலிக்காது,” என்றார் திருமாவளவன்.

