பத்திரப்பதிவில் மோசடி: தாசில்தார் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு

2 mins read
cb4194d4-bf56-400f-be37-dd4585c42a3d
பத்திரப் பதிவு மோசடி. - படம்: சமூக ஊடகம்

திருப்பத்தூர்: பத்திரப்பதிவில் மோசடி செய்தது தொடர்பாக திருப்பத்தூரில் தாசில்தார் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதி வானது. போலி வாரிசு சான்றிதழ் பெற்று அதன் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இதுபோன்ற முறைகேடுகளைக் கண்டறியும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

பத்திரப்பதிவு நடவடிக்கையின்போது ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து இத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை தலைவரோ குறிப்பிட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும் என்ற நிலை இருந்தது.இந்நிலையில், பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதா மூலம் மோசடிகளைத் தடுக்க வழி பிறந்துள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. வாணியம்பாடியை சேர்ந்த பவானி சங்கருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு பவானி சங்கர் காலமானார்.

அதன் பின்னர் அவரது இரண்டாவது மனைவியும் அவரது மகனும் சேர்ந்து போலி வாரிசு சான்றிதழ் பெற்று பவானி சங்கரின் சொத்துகளை அபகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல் மனைவி கமலா, வாணியம்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, அவரது மகன், வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி, துணை தாசில்தார், பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என சார்பதிவாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்