சனாதனம் குறித்த திமுகவின் கருத்தை ஏற்கவில்லை என்கிறது காங்கிரஸ் கட்சி

1 mins read
c0232390-6daa-4776-81f1-5e737bcbe7b2
எந்தவொரு மதம், நம்பிக்கையை பற்றி அவதூறாகப் பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன்கெரா தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்

சனாதனம் குறித்த திமுக தலைவர்களின் கருத்துகளை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

“எங்களைப் பொறுத்தவரை அனைத்து மதங்கள், நம்பிக்கைகளை மதிக்கிறோம். எந்தவொரு மதம், நம்பிக்கை குறித்து அவதூறாகப் பேசக்கூடாது. இதுபோன்ற கருத்துகளை இந்திய அரசமைப்பு சாசனம் ஏற்கவில்லை,” என்று காங்கிஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன்கெரா டெல்லியில் தெரிவித்தார்.

“சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஒருவரின் கருத்தை திரித்துக்கூற பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் அவர் தாராளமாக திரித்து பேசட்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் அனைத்து மதங்கள், சமுதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளை மதிக்கின்றன,” என்று அவர் வலியுறுத்தினார்.

“ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். பாரத ஒற்றுமை யாத்திரை மூலம் மக்களிடம் ஒற்றுமை உணர்வு வலுப்படுத்தப்பட்டது. ஆனால் சில சக்திகள் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றன. அவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். எங்களைப் பொறுத்தவரை மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்து வருகிறோம். நாட்டில் பிரிவினையைத் தூண்டும் மிகப்பெரிய சக்திகளோடு போராடி வருகிறோம்,” என்று பவன்கெரா மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்