தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதையில் உருட்டுக் கட்டை மோதல்; மனைவி அடித்து 75 வயது கணவர் பலி

2 mins read
b998020f-fc2a-439b-9d2b-76e5e21f1e57
கணவனும் மனைவியும் குடித்துவிட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதில் 65 வயது மனைவி தெய்வானை (படம்) அடித்த அடி தாங்காமல் 75 வயது கணவர் மண்டை உடைந்து மாண்டார். - படம்: தமிழக ஊடகம் 

கோவை: கோவை ராமநாதபுர பகுதியில் முதிய தம்பதியர் குடிபோதையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொண்டதில் அடிதாங்க முடியாமல் கணவர் மண்டை உடைந்து சுருண்டு விழுந்து மாண்டார்.

லோகநாதன், 75, என்பவரும் அவருடைய மனைவியான தெய்வானை, 65, என்பவரும் செல்வபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தனர்.

அவர்களுடைய ஒரே மகனான மணிகண்டன் திருமணமாகி குடும்பத்துடன் வேறு ஏதோ ஓரிடத்தில் வசித்து வருகிறார்.

லோகநாதன் வேலைக்குச் செல்வதே கிடையாது. ஆனால், அவருடைய மனைவியான தெய்வானை வீடுகளில் வேலை செய்து வந்தார். ஆடுகளை வளர்த்து வந்தார்.

கணவன், மனைவி இருவருமே குடிப்பழக்கம் உள்ளவர்கள். நாள்தோறும் பிற்பகல் நேரத்தில் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் மதுபானம் அருந்துவது உண்டு.

அந்தப் பழக்கத்தையொட்டி சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் இருவரும் அளவுக்கு அதிகமாகக் குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில், லோகநாதனுக்கும் தெய்வானைக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது.

கோபமடைந்த லோகநாதன் பக்கத்தில் இருந்த உருட்டுக் கட்டையால் மனைவியை அடித்தார். மனைவியும் வேறு ஓர் உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு கணவரை அடித்தார்.

தெய்வானை ஓங்கி அடித்ததில் லோகநாதனின் மண்டை உடைந்தது. நிலைகுலைந்துபோன லோகநாதன், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதனிடையே, கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிந்தநிலையில் தெய்வானை தன்னுடைய கணவர் மாண்டுவிட்டதை அறிந்து தேம்பி தேம்பி புலம்பி அழத்தொடங்கினார்.

அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அந்தச் சம்பவம் பற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தெய்வானை இறந்து கிடந்த கணவருக்கு அருகே அமர்ந்துகொண்டு தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதபடியே இருந்தார்.

அருகே அவர் கணவரை அடித்துக் கொன்ற உருட்டுக் கட்டையும் கிடந்தது. அதிகாரிகள் தெய்வானையைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக லோகநாதனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்து லோகநாதன் தம்பதியர் வீடு யாரும் இன்றி வெறிச்சோடிப்போனது.

அந்த வீட்டை அதிகாரிகள் பூட்டிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்