சென்னை: தமிழ்நாட்டை ஆளும் திமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் ‘நமக்கே நாற்பது’ என்ற வியூகத்துடன் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
‘நாற்பதும் நமதே நாடும் நமதே’ என்ற முழக்கத்துடன் ஆளும் திமுக களமிறங்கி இருக்கிறது. இந்தக் கட்சி காங்கிரசுடன் சேர்ந்து களமிறங்கும் என்று நம்பப்படுகிறது.
அதேவேளையில், 1,000 வாக்காளர்களுக்கு 25 பேர் கொண்ட வாக்குச்சாவடி குழு என்ற வியூகத்துடன் ‘நாற்பதிலும் வெற்றி’ என்ற இலக்குடன் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின், நெய்வேலியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார்.
அப்போது நாடும் வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால் தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் ‘இண்டியா கூட்டணி’ வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 1,000 வாக்காளர்களுக்கு 25 பேர் கொண்ட வாக்குச்சாவடி குழுக்களை அமைத்து செயல்பட்டு நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதுரையில் நடந்த எழுச்சி மாநாட்டை அடுத்து கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு அவர்களை பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாஜகவுடன் கூட்டு வைத்து தேர்தலைச் சந்திக்க அதிமுக திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இப்போதைய இந்திய அரசு மும்முரமாக இருக்கிறது.
இப்படி ஒரு திட்டம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழக சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று அதிமுக எதிர்பார்ப்பதாக தெரியவந்து இருக்கிறது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கும்.
ஆகையால், அதற்கும் தயாராகும்படி அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.