சென்னை: ஓமான் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட சிவகங்கை ஆடவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
38 வயதான தனசேகர் என்ற அவர் மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார் என்றும் விடு முறையை குடும்பத்தாருடன் கழிக்க நாடு திரும்பினார் என்றும் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை மஸ்கட்டில் இருந்து 163 பயணி களுடன் சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தார் தனசேகர். விமானம் தரையிறங்கிய பின்னர் அனைத்து பயணிகளும் இறங்கிவிட்ட நிலையில், தன சேகர் மட்டும் தமது இருக்கையில் அசைவின்றிக் காணப்பட்டார்.
அவர் மயக்கமடைந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்குழுவினர் தனசேகரைப் பரிசோதித்தனர். பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தனசேகரின் இறப்பு குறித்து சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் உள்ள அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

