வேன் மீது லாரி மோதியதில் 7 பெண்கள் மரணம்

1 mins read
9807d8f4-aaa4-4786-9706-cde69647e5a4
மோதிய லாரியும் உயிரிழந்தோரில் சிலரும். - படங்கள்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றனர். வேன் ஒன்றில் சென்ற அவர்கள் தர்மஸ்தாலாவைச் சுற்றிப் பார்த்த பின்னர் திங்கட்கிழமை ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் சண்டியூர் என்னும் இடத்தில் சென்றபோது திடீரென வேன் பழுதடைந்து நின்றது. சாலை ஓரம் அதனை பழுதுபார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, நின்றிருந்த வேனின் பின்பக்கம் பலமாக மோதியது. அந்த விபத்தில் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மாண்டவர்களில் சிலர் வேனுக்கு உள்ளேயும் மேலும் சிலர் சாலை ஓரத்திலும் இருந்தவர்கள்.

விபத்து பற்றி அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியோடு, உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த மேலும் ஏழு பேரை மீட்டு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை அவர்கள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து