சென்னை: தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பால் சென்னையில் நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
இந்நிலையில், காய்ச்சல் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 21 ஆயிரம் களப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, டெங்கி ஒழிப்புப் பணி தொடர்பாக செவ்வாய்க்கிழமையான இன்று தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, மதுரவாயல் பகுதி யைச் சேர்ந்த ரக்சன் என்ற நான்கு வயதுச் சிறுவன் அண்மையில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவனின் மரணம் மதுரவாயல் பகுதி மக்களை சோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் சரியாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், போராட்டத்திலும் குதித்தனர். இதையடுத்து, அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் டெங்கிப் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்.
“தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொசு உற்பத்தியாகும் இடங் களைக் கண்டறிந்து, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், டெங்கிக் காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 125ஆக உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.