தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர்: மகளிர் உரிமைத் தொகை பெற 1.06 கோடி பேர் தேர்வு

2 mins read
ca05f31a-15a5-4fd4-9578-f110b91fabc7
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயனடைவர் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் மாபெரும் திட்டம் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட பின்னர், முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு கோடிக்கு மேற்பட்டோர் பயனடைவர் என்பதால் கிடைக்கும் பாராட்டு ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம் என்றும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உரிமைத்தொகைப் பெற தகுதியிருந்தும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று யாரேனும் கருதினால், அவர்களின் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

“ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இனிமேல் மாதாமாதம் ரூ.1,000 பெறப்போகின்றனர். அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிற, அதிக பயனாளிகளை உள்ளடக்கிய திட்டமாக இது உள்ளது. இதை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது,” என்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளிப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சிறு தவறு நடந்துவிட்டால்கூட கெட்ட பெயர் வரும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டிய அவர், எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறுகூட நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், முதல்வரின் காலை உணவு திட்டம், ‘புதுமைப்பெண்’, ‘நான் முதல்வன்’, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய ஐந்து திட்டங்கள் குறித்தும் மக்களிடம் திரும்பத் திரும்ப எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், எந்த ஒரு திட்டத்தையும் முறையாகச் செயல்படுத்தினாலே, பயனடைந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு பாராட்டிப் பேசுவார்கள் என்றார்.

குறிப்புச் சொற்கள்