சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்பட எட்டு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து தெரியவந்ததும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரின் வீட்டில் சோதனை நடத்தப்படும் தகவல் முதலில் வெளியானது. இதையடுத்து கோவை, கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவந்தது.
செந்தில் பாலாஜியுடன் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கெனவே மூன்று முறை சோதனை நடத்திவிட்டனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தமக்குப் பிணை வழங்கக்கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்குக் கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், மீண்டும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அமலாக்கத்துறை.

