சென்னை: தமிழகத்தில் மணல் குவாரிகளிலும் அவற்றுடன் தொடர்புள்ள இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது என்றும் இந்நடவடிக்கை பலமணி நேரம் நீடித்தது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் பேரளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தொடர் புகார்களை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை ஏழு மணிக்கெல்லாம் சோதனையைத் தொடங்கினர். சில குவாரிகளிலும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
கணக்காளர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முறைகேடுகள் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை குறித்த முழு விவரங்களையும் அமலாக்கத்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


