தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெங்கிக்கு எதிராக தமிழக அரசு போர் தொடக்கம்

2 mins read
19857fe1-8cb1-4571-9f2e-0f4b5cf53322
தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெங்கி காரணமாக இதுவரை மூன்று பேர் மரணமடைந்துவிட்டார்கள். - படம்: தமிழக ஊடகம் 

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கி காய்ச்சல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். 4,000 பேரைப் பரிசோதித்ததில் 253 பேருக்கு டெங்கி காய்ச்சல் இருப்பதாகத் தெரியவந்து இருக்கிறது.

இதையடுத்து டெங்கி காய்ச்சலுக்கு எதிராக தமிழக அரசு போர் தொடங்கி இருப்பதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்.

ஆகக் கடைசியாக எக்மோரில் உள்ள சிறார் சுகாதார நிலையத்தில் நான்கு வயது சிறுவன் டெங்கி காய்ச்சலுக்குப் பலியாகிவிட்டான்.

அந்தச் சிறுவனுக்கு ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பிறகு அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து சென்னை முழுவதும் உள்ள 17 லட்சம் வீடுகளில் ஒவ்வொரு 500 வீடுகளுக்கும் பூச்சு மருந்து அடிக்கும் ஊழியர் ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஆணையர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அந்த ஊழியர்கள் கட்டுமான இடங்களுக்கும் சென்று மருந்தடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பொதுவாக பருவமழைக் காலம் தொடங்கும்போது அதற்கு முன்னதாக டெங்கி காய்ச்சல் அதிகமாகப் பரவும் என்று கூறிய ஆணையர் ராதாகிருஷ்ணன், டெங்கி எதிர்ப்பு போராட்டத்தில் அரசாங்கத்தின் பல துறைகளும் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 2018ஆவது ஆண்டில் டெங்கி காய்ச்சல் காரணமாக 13 பேர் மரணமடைந்தார்கள். அப்போது 4,486 பேர் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை 2019ல் முறையே ஐந்தாகவும் 8,527ஆகவும் இருந்தது. பிறகு 2021ல் டெங்கி காய்ச்சல் காரணமாக எட்டுப் பேர் மாண்டுவிட்டனர். சென்ற ஆண்டில் 6,039 பேர் பாதிக்கப்பட்டனர். சென்ற ஆண்டில் எட்டுப் பேர் மாண்டுவிட்டனர் என்று ஆணையர் தெரிவித்தார்.

இதனிடையே, சுகாதாரத் துறை, பஞ்சாயத்து நிர்வாகத் துறை, பொதுப் பணித்துறை, வீடமைப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூட்டம் நடத்தி டெங்கி காய்ச்சலை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தார்.

மருத்துவமனையின் தலைவர்கள், சுகாதார அதிகாரிகள் போன்ற மாவட்ட உயர் அதிகாரிகளைக் கூட்டி தமிழக அரசு சுகாதாரத் துறை சனிக்கிழமை பெரிய அளவில் விவாதிப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

அதில் டெங்கிக் காய்ச்சலைத் துடைத்து ஒழிப்பதற்கான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவரையில் தமிழ்நாட்டில் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்