புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை வியாழக்கிழமை அதிகாலை நடுக்கடலில் இலங்கைக் கடற்படை சிறைபிடித்தது.
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து 163 விசைப்படகுகள் மூலமும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 78 விசைப்படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான விசைப் படகில் நான்கு மீனவர்களும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான விசைப் படகில் 5 மீனவர்களும் 32 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படைக் கப்பலில் இருந்த வீரர்கள், மீனவர்களின் படகுகளுக்கு அருகே வந்து கப்பலை நிறுத்தினர். படகுகளில் இருந்த ஒன்பது பேரையும் கைதுசெய்ததுடன் இலங்கை எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி அவர்களது படகுகளையும் ஓட்டிச்சென்றனர்.
காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படும் போக்கை தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்களால் கொள்ளைகளுக்கு ஆளாக்கப்படுவதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கைக் கடற்படை அத்துமீறி நுழைந்து கைது செய்திருக்கிறது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
“இதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அரசை கடுமையாக எச்சரிப்பதன் மூலமாகவோ, அல்லது இரு தரப்பு பேச்சுகளின் மூலமாகவோ வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

