திருவாரூர்: திமுக நடத்தும் சனாதனம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்களைப் பங்கேற்க செய்வதற்காக அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் அனுப்பிய சுற்றறிக்கையால் பாரதிய ஜனதா கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில், அண்ணா பிறந்த நாளையொட்டி செப்.15ஆம் தேதி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ராஜாராமன், மாணவர்களுக்கு செப்.12ஆம் தேதி விடுத்த சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையில், ‘‘சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை, அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி கலைஞர் கோட்டத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்துகொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது,’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவல் பரவியதையடுத்து பாஜகவினர் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, திரு.வி.க கல்லூரி முதல்வரைக் கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் செப்.15ஆம் தேதி அக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட பாஜக அறிவித்தது.

