‘மொழிகளை இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும்’

‘மொழிகளை இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும்’

2 mins read
7cfeb0a3-705a-41fe-80ae-ed5d42fa45f4
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: இந்திய மக்களை ஒன்றிணைப்பதில் இந்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

“உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது. பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால், இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது,” என்று கூறியுள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார்.

இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பதிவில், “தேசிய ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் இழையை இந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன. அவ்வகையில், அமித்ஷா பேச்சுக்கு தமிழ் நாட்டின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது,” என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் இந்தக் கருத்து.

தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உதயநிதி தன் பதிவில் கூறியுள்ளார்.