சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாத்துரையின் பிறந்த நாளையொட்டி, சிறப்பாகப் பணியாற்றிய மற்றும் வீரதீர செயல்களில் ஈடுபட்ட தமிழகக் காவல்துறை அதிகாரிகள் 127 பேருக்கு பெருமைமிகு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15ஆம் நாள் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

