தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேளச்சேரி 9 அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து

2 mins read
3408d1df-72ae-46c0-a054-27d0291d4752
வேளச்சேரியில் கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வேளச்சேரியில் 9 அடுக்குமாடிக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சென்னை வேளச்சேரி விஜயநகர்ப் பகுதியின் முக்கிய சாலையில் புதியதாக 9 அடுக்குமாடிகளைக் கொண்ட நட்சத்திர விடுதியின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமானப் பணிகளின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. முதல் தளத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தப் பணிகளில் 10க்கும் மேற்பட்ட வடமாநில தச்சுத் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

புதன்கிழமை மாலை 5 மணியளவில் கட்டுமானத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் கட்டடம் முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது. அதையடுத்து அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி, திருவான்மியூர், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேர போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கட்டடத்தின் அருகே பெரிய வணிக வளாகமும் கடைகளும் உள்ளதால் தீ பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் உள்கட்டமைப்புப் பணிகள் செய்தபோது ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது.

முதல் தளத்தில் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சாரக்கட்டுகள் உள்ளிட்ட பல பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

தீ விபத்து நடந்தபோது உள்கட்டமைப்புப் பணிகளில் ஏராளமான வடஇந்திய தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நல்லவேளையாக உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்