தமிழ்நாட்டில் புதுயுகம் தொடக்கம்:அர்ச்சகர்களாகும் இளம்பெண்கள்

தமிழ்நாட்டில் புதுயுகம் தொடக்கம்:அர்ச்சகர்களாகும் இளம்பெண்கள்

2 mins read
3b0e88b2-16e6-448d-b693-4fa4df8142ec
தமிழ்நாட்டில் அரசாங்கக் கோயில்களில் துணை அர்ச்சகர்களாக திருப்பணி செய்ய இருக்கும் (இடமிருந்து) எஸ். கிருஷ்ணவேணி, எஸ். ரம்யா, என். ரஞ்சிதா. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக இந்துக் கோயில்களில் ஆண்களே அர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். இந்த வழக்கம் தொன்றுதொட்டு நடப்பில் இருந்து வருகிறது.

ஆனால், விரைவில் மூன்று இளம்பெண்கள் கோயில்களில் துணை அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் புதிய வரலாறு படைக்கப்படுவதாகவும் புதிய யுகம் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ். கிருஷ்ணவேணி, எஸ். ரம்யா, என். ரஞ்சிதா என்ற அந்த மூன்று இளம்பெண்களும் அதற்கான பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்று உள்ளனர்.

அவர்கள் அரசாங்கத்தின்கீழ் இயங்கும் கோயில்களில் அர்ச்சகர்களாக திருப்பணி ஆற்றுவார்கள்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயத்தில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது.

அதில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ்களை வழங்கினார். அவர்களில் ஆண்களும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை தீவிரமாகக் கையில் எடுத்தது.

நாட்டம் இருந்தால் பெண்களும் அதில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து, எஸ் கிருஷ்ணவேணி, எஸ் ரம்யா, என் ரஞ்சிதா மூவரும் அர்ச்சகர்களாகத் தகுதிபெற்றனர்.

இதனிடையே, இதன் தொடர்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ‘கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்’ என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“பெண்கள் விமானத்தை இயக்கினாலும் விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன.

“பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்