சென்னை: தமிழ்நாட்டின் தென்மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளது.
அதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தென்மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 2022 ஆகஸ்ட் வரையில் 364 கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன. அவை இந்த ஆண்டில் 323ஆகக் குறைந்துள்ளன. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன என்று பரப்பப்படும் தகவல் தவறானது ஆகும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தென்மண்டலத்தில் இரு வேறு சமூகத்தினர் இடையே நடைபெற்ற கொலை வழக்குகளைப் பொறுத்தவரை, சென்ற 2022 ஆகஸ்ட் வரையில் 82 வழக்குகளும், இந்த ஆண்டில் 74 வழக்குகளும் பதிவாகி உள்ளன. எனவே, சாதி ரீதியான கொலை வழக்குகளும் குறைந்துள்ளன.
தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. இவற்றை மேலும் கட்டுப்படுத்திட வாரந்தோறும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.