வேலூர்: தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்து இருக்கிறது.
அந்தத் திட்டத்தின் கீழ் ரூ.142.16 கோடி செலவில் மொத்தம் 3,510 வீடுகளைக் கட்டும் பணி கடந்த ஆண்டில் தொடங்கியது.
இப்போது 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன.
வீடுகளை முகாம்வாசிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேல்மொணவூர் முகாமில் ரூ.11 கோடியில் கட்டப்பட்டு உள்ள 220 வீடுகளை அங்குள்ளவர்களிடம் ஒப்படைக்கிறார்.
பிறகு அவர் காணொளி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள இதர வீடுகளையும் திறந்து வைக்கிறார்.