சென்னை: ‘இந்தியாவில் குற்றம், குற்றவியல் கண்காணிப்புக் கட்டமைப்பு, இதர அமைப்புகள்’ என்ற கருப்பொருளில், இணையச் சவால் என்ற போட்டியைப் புதுடெல்லியில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நடத்தியது.
அந்தப் போட்டியில் அனைத்து மாநில காவல்துறைகளும் கலந்துகொண்டன.
“மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளின் தொழில்நுட்பப் பயன்பாட்டின் ஒப்பீட்டு மதிப்பீடு” என்ற பிரிவின்கீழ், தமிழகக் காவல்துறை தாக்கல் செய்த ‘குண்டர்கள் கண்காணிப்பு’ (TracKD) என்ற செயலி அனைத்து மாநிலங்களுடன் நடந்த போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அந்தப் பரிசுக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டு நவம்பரில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட ‘குண்டர்கள் கண்காணிப்பு’ செயலி, குண்டர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
அந்தச் செயலி காவல்துறை அதிகாரிகளுக்கு குண்டர்கள், குற்றப் பின்னணி கொண்டோரின் தகவல்களை விரல் நுனியில் தருகிறது.
அதன் உதவியுடன் 39 மாவட்டங்கள், ஒன்பது காவல் ஆணையரகங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட குண்டர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.