‘தமிழகத்தில் நிபா கிருமி கண்டறியப்படவில்லை’

‘தமிழகத்தில் நிபா கிருமி கண்டறியப்படவில்லை’

2 mins read
a768ff65-778c-4539-b30c-7d399e8fc536
தமிழகத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரளாவில் இருந்து வருபவர்களிடம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் நிபா கிருமித்தொற்று பாதிப்பு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,048 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர் என்று கூறிய அவர், மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது என்று கூறினார்.

மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 5 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லைப்குதிகளில் நடந்து வருகிறது.

இதுவரை கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

உணர் கருவிகள் மூலமாக சுகாதாரப் பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து அவர்கள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது.

அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் 1080 பேரை நிபா தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள்.

நிபா தொற்று மலப்புரம், கண்ணூர், திரிசூர், வயநாட்டிலும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் ராஜீவ் பாஹல் செய்தியாளர் சந்திப்பில், “நிபா கிருமி பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் இறப்பு விகிதம் 2 முதல் 3 விழுக்காடு என்றால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 முதல் 70 விழுக்காடு ஆக உள்ளது.

“மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் நிபா தொற்று தாக்கியபோது அது வெளவால்கள் மூலமாகவே பரவியது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போது இந்தத் தொற்றுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாகவே மழைக்காலத்தில் இந்த நோய் அதிகம் பரவுகிறது.

“நிபா தொற்று அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்டிபாடி மருந்துகள் தருவிக்கப்படும்,” என்று ராஜீவ் பாஹல் கூறினார்.

நிலைமையைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றும் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சுகாதாரம்