கடலூர்: கடலூரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் காவல் துறையும் தனியாரும் பயன்படுத்தும் துப்பாக்கிக் குண்டுகள் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் அதுபற்றி புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பையன்கள் அந்தக் குண்டுகளைக் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் அந்தப் பையன்களை அழைத்துக்கொண்டு ஆற்றுப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அந்த 12 வயது சிறுவர்கள் ஆற்றில் கைகளால் துழவித் துழவி இறால் பிடித்தபோது கைகளில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் சிக்கின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு அது பற்றி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் ஆற்றுப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு மேலும் கைத்துப்பாக்கிக் குண்டுகள் கிடைத்தன.
கடந்த சில நாள்களுக்கு முன் தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர் களிடம் துப்பாக்கி கிடைத்தது என்பது குறப்பிடத்தக்கது.
ஆற்றில் கிடைத்த துப்பாக்கிக் குண்டுகள் கடலூர் மாவட்ட காவல்துறை அல்லது புதுச்சேரி மாநில காவல்துறைக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


