‘மக்களுடன் ஸ்டாலின்’: தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்

‘மக்களுடன் ஸ்டாலின்’: தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்

2 mins read
c7f4cf67-6118-40b9-9905-0046d22eff4b
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசு மிக விரைவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.

இச்செயலி மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக அரசு செயல் படுத்தி வரும் அனைத்து திட்டங்கள் குறித்தும் முழுத் தகவல்களை ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இச் செயலியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின்படி, ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

“தமிழக மக்களுக்காக மாநில அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் இந்தச் செயலியின் மூலம் ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இந்தச் செயலியின் ஒரு பிரிவில் ‘உங்கள் திட்டம்’ என்ற பொத்தான் உள்ளது.

“அதில் பொதுமக்கள் பதிவு செய்யும் சுயவிவரங்களைப் பொறுத்து அவர்களுக்கு எந்தத் திட்டம் பொருந்துமோ அந்தத் திட்டங்கள் சார்ந்த தகவல்கள் தன்னிச்சையாக இச்செயலியில் வரும்.

“குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பட்டதாரி இளைஞர்கள் என்று, யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அரசு செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை அமல்படுத்துவதில் மட்டுமின்றி, அதைக் கடைக்கோடி மக்களுக்கும் எளிமையான வழியில் கொண்டு சேர்ப்பது அரசின் கடமை என்றும் அத்தகைய தொலைநோக்கு பார்வையோடும் அடிப்படை தேவை என்னவென்ற புரிதலோடும் வடிவமைக்கப்பட்டதே ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலி என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்