தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதயநிதி: தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த நிதி வழங்குவீர்

1 mins read
3b2dd851-db02-4039-af92-384d9c9ab1cd
அமைச்சர் உதயநிதியிடம் அறக்கட்டளைக்கான சொந்த நிதியை வழங்கும் முதல்வர் ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த ‘சாம்பியன்ஸ்’ அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

பொருளியில் ரீதியாக பின்தங்கியுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை தொடக்க விழாவின்போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சொந்த நிதியாக ரூ.5 லட்சத்தை வழங்கி உள்ளார் என தமிழக விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஏழை, எளிய பின்புலத்தைச் சேர்ந்த திறமைமிக்க விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவது, பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு உதவுவது போன்றவற்றுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து நிதி உதவி அளிக்கப்படும்.

“அவ்வாறு நிதி பெற்றுச் செல்லும் நம் வீரர், வீராங்கனைகள் வெற்றிக் கிண்ணங்கள் பதக்கங்களுடன் திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத்துறையின் தலைநகராக்குவோம்,” என்று அமைச்சர் உதயநிதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.