மதுரை: விமான நிலையக் கழிப்பறையில் இருந்து ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சனிக்கிழமையன்று விமான நிலையத்தின் ஏழாம் அறையில் உள்ள கழிவறையில் யாரோ வைத்துச் சென்ற ஒரு உறையில் இரண்டு கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.1.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள்தான் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் சிலர் மதுரையில் இருந்து பின்னர் இலங்கை சென்றனர்.
விமான நிலையத்தில் அதிகாரிகளின் கெடுபிடியைக் கண்டு கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டுவிட்டு அவர்கள் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சில பயணிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. தங்கக் கடத்தல் தொடர்பாக யாரேனும் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா எனத் தெரியவில்லை.