திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கத்தைக் கடத்தி வந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் வழக்கம்போல் திருச்சி வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த அனைத்துப் பயணிகளையும் சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது ஒரு பயணியின் நடவடிக்கைகளைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. எனவே, அவரை தனியே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்தப் பயணி தனது உள்ளாடையில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1.14 கோடி மதிப்பிலான 1.92 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த தங்கக் கடத்தலில் அப்பயணி தனித்துச் செயல்பட்டாரா அல்லது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.