சென்னை: தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வேலூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்நாடு, தமிழக மக்கள், தமிழினத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு என்ற மாநிலத்தின் உரிமைகளை சிதைப்பதன் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கையை ஒரு தரப்பினர் அழிக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களுக்குரிய நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜிஎஸ்டியைக் கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்துள்ளனர் என்றார்.
“ஜிஎஸ்டி மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள்.
“மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகள், கடன்கள், மானியங்கள், விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் ஆகிய அனைத்தையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா,” என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசாங்கம் குறிப்பிடும் கல்வி வளர்ச்சியை தமிழ்நாடு எப்போதோ எட்டி விட்டது என்றார்.
கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என்றும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
“லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வடமாநிலங்களிலும் பதிவாகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் வெளியான மத்திய தலைமைத் தணிக்கையாளர் அறிக்கையின்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சிபிஐ அதிகாரி கள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே உரிய புள்ளி விவரங்களைக் கொடுத்திருக்கிறது.
“இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது என்றும் நாடு முழுவதும் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

