நடிகை புகார்: மனைவியுடன் காவல்நிலையம் சென்ற சீமான்

1 mins read
26af83eb-a832-4bb6-9baf-ff502e4a9ffd
தமது மனைவி கயல்விழியுடன் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தமது மனைவியுடன் காவல் நிலையம் சென்றார்.

நடிகை விஜயலட்சுமி, தம்மை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும் பலமுறை கருத்தரித்து அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில், சீமானுக்கு காவல்துறையினர் இருமுறை அழைப்பாணை அனுப்பினா்.

இதற்கிடையே, சீமான் மீது தாம் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தெரிவித்தார்.

அப்போது பேசிய விஜயலட்சுமி, “சீமான் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூரு செல்லவுள்ளேன்.

“காவல் துறையில் கொடுத்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினா். சீமானுடன் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

“இந்த வழக்கில் தொடா்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை,” என்றாா்.

இந்த நிலையில், அழைப்பாணையை ஏற்று வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சீமான் திங்கள்கிழமை காலை சென்றார். அவரது மனைவி கயல்விழி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியதால் காவல் நிலையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்