நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி திங்கட்கிழமை காலை உயிரிழந்தார்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவருக்கு சுஜாதா, 38, என்ற மனைவி மற்றும் மகள் கலையரசி, 14, மகன் பூபதி, 12, இருந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு சுஜாதா தனது மகள், மகன் மற்றும் அண்ணன் சினோஜ் (56), அண்ணி கவிதா (50) ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கு ‘ஷவர்மா’ உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர்.
அவற்றை வீட்டில் சாப்பிட்டபின் சிறிது நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கட்கிழமை காலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
உணவு சாப்பிட்ட கலையரசியின் தாய், அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சனிக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

