காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்ற போது யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்துக்குள்ளானது.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் காணொளிகளை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார்.
நெடுஞ்சாலைகளில்கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
திரைப்பட நட்சத்திரங்களைப்போல் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கிட்டதட்ட மூன்று மில்லியன் பேர் இவரது ரசிகர்களாக உள்ளனர். இவர் எங்கு சென்றாலும் அங்கு போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏராளமானோர் இவரைக் காண ஆவலாக வருவதுண்டு.
கடந்த ஆண்டு வடஇந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் பைக்கில் சென்ற காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. பைக் அப்பளம் போல் நொறுங்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மீது பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.