இந்தியில் நிகழ்ச்சி நிரல்: கிழித்தெறிந்த திருச்சி சிவா

1 mins read
e69f332f-937f-4e95-9f76-a39dfe92a448
திருச்சி சிவா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: திமுக எம்பி திருச்சி சிவா, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி நிரலை அவையிலேயே கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்றும் அந்நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டுமே இருந்ததால் தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் பின்னர் விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரானது புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறுகிறது. இதற்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டுமே உள்ளது என்று திருச்சி சிவா எம்பி சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டுமே வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார்.

“பின்னர் அக்கூட்டத்தில் வைத்தே நிகழ்ச்சி நிரலை கிழித்துப் போட்டு, மீண்டும் இதுபோல நடைபெற்றால் நிகழ்ச்சி நிரலைக் கொடுக்கும் அந்த இடத்திலேயே கிழித்து எறிவோம் என்றும் கண்டனம் தெரிவித்தேன்.

“இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இனிமேல் இதுபோல் நடக்காது என்று வாக்குறுதி அளித்தார்,” என்று திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்