சென்னை: பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
“சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று வந்த ஆறாம் வகுப்பு மாணவி, அதே பள்ளியில் உயர்வகுப்பு பயிலும் இரு மாணவர்களால் தொடர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்ததுடன், மாணவிக்கு மனநிலை பாதித்து விட்டதாகக் கூறி அவமதித்திருக்கின்றனர். ஆசிரியர்களின் இந்தப் போக்கு கவலையளிக்கிறது.
“பள்ளித் தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவியின் மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் மகளிர் ஆணையமும் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
இருந்தும் எவ்வித வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்துவதும், மாணவியை மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்திரித்தது மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். இந்த குற்றங்களை இழைத்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.