சேலம்: சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யமுடியவில்லை. அங்கு கணினிக் கட்டமைப்புக் கோளாறே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அதையடுத்து, ஏராளமான பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சமரசம் செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18ஆம் தேதி முதல் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் மின்-சேவை மையங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் நேற்று முதல் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
அதேபோல் ஈரோட்டிலும் கிட்டத்தட்ட 200,000க்கு மேற்பட்டோரின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அங்கும் மகளிர் ஒன்றுதிரண்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார் சமரசம் பேசி, மறியல் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பணம் கிடைக்காதவர்களுக்கு வரும் 23ஆம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததாகத் தெரிகிறது.