சென்னை: வண்ணஜாலம் காட்டி மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ள பாஜகவை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும் அனைத்து இடங்களிலும் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது ஆகும்.
“அதற்கு முதலில் அவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இதையே தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.
“திமுக ஆட்சியில் அமரும்போதெல்லாம் செயல்படுத்திக் காட்டியும் வருகிறது. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1996ஆம் ஆண்டிலேயே வழங்கிவிட்டார்.
“பாரதிய ஜனதா கட்சியோ கடந்த 9 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்துகொண்டு மகளிர் இடஒதுக்கீடு குறித்து பாராமுகமாக இருந்து வந்தது.
“இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் வண்ணஜாலம் காட்டி மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளது. இதை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
“பாஜக இதனைக் காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புக்காகச் செய்தாலும், இப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.
“1996ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த மத்திய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது.
“2005ஆம் ஆண்டும் திமுக இடம்பெற்ற மத்திய அரசு இதனைத் தாக்கல் செய்தது. முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பா.ஜ.க அதை எதிர்த்தது. பாஜக பெண் உறுப்பினரான உமா பாரதியே இதனைக் கடுமையாக எதிர்த்தார். கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்களில் தற்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கியமானவர்,” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அவர், “மகளிர் உரிமைக்கு 75 ஆண்டுகாலமாக பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம், மகளிர் இட ஒதுக்கீட்டை அன்று வரவேற்றது. இன்றும் வரவேற்கிறது.
“சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பாஜகவுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்கும் என்றால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததுமே இதனைச் செய்திருப்பார்கள்.
“சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புத் தகுதிப் பறிப்புச் சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பாஜக அரசு - அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த ஒன்பது ஆண்டுகாலமாகக் காட்டவில்லை.
“இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பாஜகவினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி பெரிய சாதனையைச் செய்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கின்றனர்.
“2016ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மகளிர் நாளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகளிர் இடஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தார்கள். ‘33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். அப்போது பாஜக அரசு மௌனம் காத்தது.
“அக்கட்சி மீண்டும் வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?,” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

