தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலணிக்குள் ‘உஷ் உஷ்’: கல்லூரி மாணவி தப்பினார்

1 mins read
32162baf-6cc2-4c25-b7cb-5814097a9dfd
கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காலணியை அணிந்துகொள்ள வந்தபோது உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது.   - படம்: தமிழக ஊடகம்

கடலூர்: காலணியைப் போட்டுக்கொள்ள கல்லூரி மாணவி முயன்றபோது ‘உஷ் உஷ்’ என்று சத்தம் கேட்டதால் அந்த மாணவி உயிர்தப்பினார்.

பரபரப்பான இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

அவர் கடைத்தெருவுக்குச் செல்வதற்காக வீட்டு வாசலுக்கு வந்து அங்கிருந்த தன்னுடைய காலணியை அணிந்துகொள்ள முயன்றபோது உஷ் உஷ் என்று ஏதோ சத்தம் கேட்டது.

காலணிக்குள் ஏதோ நெளிந்ததைப் பார்த்த அந்தப் பெண், அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

அதைக் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, காலணிக்குள் நல்ல பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

பயந்துபோன குடும்பத்தினர் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலமான செல்வா என்ற பாம்புப்பிடி வீரரை அழைத்தனர்.

விரைந்து வந்த செல்வா, பாம்பைப் பிடிக்க முயன்றபோது அது படமெடுத்துச் சீறியது, ஆடியது.

எல்லாரும் பயத்துடன் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செல்வா லாவகமாக பாம்பின் படத்தைப் பிடித்துவிட்டார்.

பாம்பு அவருடைய கையில் சுற்றிக்கொண்டது. அதனைப் பத்திரமாக மீட்டு பக்கத்தில் இருக்கும் காப்புக்காடு என்ற பகுதியில் செல்வா கொண்டுபோய்விட்டார்.

இனிமேல், காலணிகளை அணியும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்தச் சம்பவத்தைப் பார்த்த மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்