தருமபுரி: பென்னாகரம் அருகேயுள்ள பூதிப்பட்டியில் விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிரைச் சேதப்படுத்தி வருவது வழக்கமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த காட்டுவளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுப்பன்றி வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்றனர்.
உடனே அப்பகுதி மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டுச் சிறைபிடித்தனர்.
அப்போது அவர்கள், “வனத்துறை அதிகாரிகளிடம் எங்களுடைய ஆடு, மாடு வனப் பகுதியில் மேய்ந்தால் அபராதம் வசூலித்து வழக்குப் பதிவு செய்கின்றனர்.
“ஆனால், சிரமப்பட்டு நாங்கள் வளர்த்து வரும் பயிர்களை இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு சேதப்படுத்தும் பயிர்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை. ஆனால், காட்டுப்பன்றி வேட்டை எனக் கூறினால் உடனே வருகிறீர்கள்,” எனச் சாடினர்.
மேலும், “எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளைநிலங்களில் புகும் காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், எங்கள் விளைநிலங்களின் பயிர்ச்சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

